back to top
Home Blog Page 271

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2022

தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a

என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை.

என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 79: 8. 9. 11. 13 . (பல்லவி: திபா 103:10a)

பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.

8எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். – பல்லவி

9எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். – பல்லவி

11சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. – பல்லவி

13அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 6: 63b, 68b

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.

நற்செய்தி வாசகம்

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2022

தவக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?” என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.

கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.

அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 7-8. 9abc. 13-14 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? – பல்லவி

7ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.

8‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்; ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். – பல்லவி

9abcஉமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். – பல்லவி

13வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.

14நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 20- 4: 1

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”

நற்செய்தி வாசகம்

அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 12, 2022

தவக்காலம் முதல் வாரம் – சனி

முதல் வாசகம்

உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 1-2. 4-5. 7-8 . (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

1மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

2அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். – பல்லவி

4ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.

5உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! – பல்லவி

7உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.

8உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

2 கொரி 6: 2b

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

நற்செய்தி வாசகம்

உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 11, 2022

தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

ஆண்டவர் கூறுவது:

தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர். ஆயினும், ‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை!

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 130: 1-2. 3-4. 5-6ac. 7-8 . (பல்லவி: 3)

பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;

2ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். – பல்லவி

3ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

4நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். – பல்லவி

5ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

6acவிடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. – பல்லவி

7இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.

8எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எசே 18: 31

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்: “கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 10, 2022

தவக்காலம் முதல் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும்.

எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t

சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். “என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும்.

ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 . (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

2aஉம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். – பல்லவி

2bcஉம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். – பல்லவி

7cஉமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 51: 10a, 12a

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

நற்செய்தி வாசகம்

கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2022 – வ2

உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி

நினைவுக்காப்பு
புனிதர், புனிதையர் – பொது

முதல் வாசகம்

ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள்.

அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 13: 34

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

நற்செய்தி வாசகம்

உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில்

இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2022

தவக்காலம் முதல் வாரம் – புதன்

முதல் வாசகம்

நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். “இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.”

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 10-11. 16-17 . (பல்லவி: 17b)

பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.

1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். – பல்லவி

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். – பல்லவி

16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நாம் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில்

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2022 – வ2

புனித இறை யோவான் – துறவி

நினைவுக்காப்பு
புனிதர், புனிதையர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில் ஈடுபட்டோர்)

முதல் வாசகம்

நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-18

அன்பிற்குரியவர்களே,

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்.

அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே.

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால், அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். – பல்லவி

3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். – பல்லவி

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7aதீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. – பல்லவி

7bஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. – பல்லவி

9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 13: 34

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

நற்செய்தி வாசகம்

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2022

தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 . (பல்லவி: 17b)

பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

15ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். – பல்லவி

17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி வாசகம்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.”

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2022 – வ2

புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர்

நினைவுக்காப்பு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

சாவோ, வாழ்வோ கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நம் சார்பில் இருக்கும் போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாது இருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? “உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 . (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,

3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். – பல்லவி

4அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;

5கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். – பல்லவி

7bகண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.

8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 5: 10

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

நற்செய்தி வாசகம்

அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-39

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

Stay Connected

798,415FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks