back to top
Home Blog Page 256

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 2, 2022

பொதுக்காலம் 13ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 9: 11-15

ஆண்டவர் கூறுவது:

“அந்நாள்களில் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போல் மீண்டும் கட்டி எழுப்புவேன். அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,” என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.

“இதோ! நாள்கள் வரப் போகின்றன; அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்; மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்; குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்” என்கிறார் ஆண்டவர். “என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்; அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத் தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்; நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்பட மாட்டார்கள்” என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab,10-11. 12-13 . (பல்லவி: 8 காண்க)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.

8abஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். – பல்லவி

10பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். – பல்லவி

12நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.

13நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17

அக்காலத்தில்

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 1, 2022

பொதுக்காலம் 13ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-6, 9-12

வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக் கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?

தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்; எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவது போல நீங்களும் புலம்புமாறு செய்வேன்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்.”

தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “இதோ! நாள்கள் வரப் போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. ஒரு கடல் முதல் மறு கடல் வரை, வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடைய மாட்டார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 2,10. 20,30. 40,131 . (பல்லவி: மத் 4: 4)

பல்லவி: மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்.

2அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.

10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். – பல்லவி

20எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.

30உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். – பல்லவி

40உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.

131வாயை ‘ஆ’வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.

இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 30, 2022 – வ2

உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர்

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

சாவோ, வாழ்வோ கடவுளின் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாது இருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? “உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 . (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,

3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். – பல்லவி

4அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;

5கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். – பல்லவி

7bகண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.

8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 4-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே மெசியா’ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். போர் முழக்கங்களையும் போர்களைப் பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா. நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும். இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.

பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர். அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்து விடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர். பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்து போகும். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 30, 2022

பொதுக்காலம் 13ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 10-17

அந்நாள்களில்

பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லி அனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், ‘எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்’ என்று ஆமோஸ் சொல்லுகிறான்.”

பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம். அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.

ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக்கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.

எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: ‘இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப் பேசாதே’ என்று நீ சொல்கிறாய்! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்; உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்; உன் நிலபுலம் பங்குபோட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 . (பல்லவி: 9b)

பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையும் நீதியுமானவை.

7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. – பல்லவி

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. – பல்லவி

9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி

10அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8

அக்காலத்தில்

இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.

இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 29, 2022 – திருவிழிப்புத் திருப்பலி

புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள்
திருவிழிப்புத் திருப்பலி

பெருவிழா

முதல் வாசகம்

என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10

ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகு வாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.

பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.

பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்.

உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 . (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.

2ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. – பல்லவி

3அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

4ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னைக் கடவுள் அழைத்தார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11-20

சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடம் இருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரை விட யூத நெறியில் சிறந்து விளங்கினேன்.

ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவும் இல்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 21: 17d

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர். என் ஆடுகளைப் பேணி வளர்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களோடு உணவருந்தியபின் சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.

இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார்.

இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 29, 2022 – பெருவிழாத் திருப்பலி

புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள்
பெருவிழாத் திருப்பலி

பெருவிழா

முதல் வாசகம்

ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில்

ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.

ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.

வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

அன்பிற்குரியவரே,

நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 28, 2022 – வ2

புனித இரனேயு – ஆயர், மறைச்சாட்சி

நினைவு
மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது

முதல் வாசகம்

அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22b-26

அன்பிற்குரியவரே,

தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு. மடத்தனமான அறிவற்ற விவாதங்கள் சண்டைகளைத் தோற்றுவிக்கும் என அறிந்து, அவற்றை விட்டுவிடு.

ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராய் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக்கொள்பவராகவும், மாற்றுக் கருத்துடையோருக்கும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவேளை அவர்கள் உண்மையை அறிந்துணர்ந்து மனம் மாறக் கடவுள் அருள்கூரலாம். அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத் தெளிவு பெறக்கூடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 5-6. 30-31 . (பல்லவி: 30a)

பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.

3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.

4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். – பல்லவி

5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.

6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். – பல்லவி

30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.

31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 9b, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சீடர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.

நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.

இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.

தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 28, 2022

பொதுக்காலம் 13ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 3: 1-8; 4: 11-12

இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக – ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக – ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்: “உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்து கொண்டேன்; ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.

தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ? வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக் கொள்வதுண்டோ? ஒன்றுமே சிக்காதிருக்கும் போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ? நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ?ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ? தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை. சிங்கம் கர்ச்சனை செய்கின்றது; அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்தது போல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். “ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன். இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 5: 4-5. 6. 7 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.

4நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.

5ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். – பல்லவி

6பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். – பல்லவி

7நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்; உமது திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 130: 5

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27

அக்காலத்தில்

இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மக்கள் எல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 27, 2022 – வ2

அலெக்சாந்திரிய நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர்

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது

முதல் வாசகம்

நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5

அன்பிற்குரியவரே,

கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்க மாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக் கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.

நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு; துன்பத்தை ஏற்றுக் கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 20-21. 24,26 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

1ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

2உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. – பல்லவி

3நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:

4‘உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ – பல்லவி

20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். – பல்லவி

24என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

26‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-19

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுது தான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 27, 2022

பொதுக்காலம் 13ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 2: 6-10, 13-16

ஆண்டவர் கூறுவது இதுவே:

“இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்; மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள். கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள்.

நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்; மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்து விட்டேன்; மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன்.

வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். விரைந்தோடுகிறவனும் தப்பமுடியாது; வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்; வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது. வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான், விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது. அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன் கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான்” என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 50: 16bc-17. 18-19. 20-21. 22-23 . (பல்லவி: 22a)

பல்லவி: கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்.

16bcஎன் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?

17நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். – பல்லவி

18திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு.

19உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே. – பல்லவி

20உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்.

21இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். – பல்லவி

22கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார்.

23நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என்னைப் பின்பற்றி வாரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில்

இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2022 2023

Stay Connected

798,518FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks