back to top
Home Blog Page 250

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 11, 2022 – வ2

புனித கிளாரா – கன்னியர்

நினைவு
புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

சகோதரர் சகோதரிகளே,

உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.

அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 11 . (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

2aநான் ஆண்டவரிடம் நீரே என் தலைவர் என்று சொன்னேன்.

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. – பல்லவி

7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 27-29

அக்காலத்தில்

பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப்படைப்பின் நாளில் மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 11, 2022

பொதுக்காலம் 19ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து வெளியேறு.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-12

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.

மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறொர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம். நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.

அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய். அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச் செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.”

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப் படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.

காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், ‘நீ செய்கிறது என்ன?’ என்று கேட்கவில்லையா? நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப் பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர். அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக் கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 78: 56-57. 58-59. 61-62 . (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை ஒருபோதும் மறவாதிருங்கள்.

56ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை.

57தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர். – பல்லவி

58தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர்.

59கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். – பல்லவி

61தம் வலிமையை அடிமைத்தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்;

62தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச் சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார். அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 135

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21- 19: 1

அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, “பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 10, 2022

புனித லாரன்ஸ் – திருத்தொண்டர், மறைச்சாட்சி

விழா

முதல் வாசகம்

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

சகோதரர் சகோதரிகளே,

குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். “ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 5-6. 7-8. 9 . (பல்லவி: 5a)

பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். – பல்லவி

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். – பல்லவி

7தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. – பல்லவி

9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12bc

அல்லேலூயா, அல்லேலூயா! என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 9, 2022

பொதுக்காலம் 19ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

“நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4

ஆண்டவர் கூறுவது: “நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்து விடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத் தின்றுவிடு” என்றார். அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது. அவர் அச்சுருளேட்டை என் முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும் கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.

அவர் என்னை நோக்கி, “மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார். நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார். மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன் போல் இனித்தது. மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 14,24. 72,103. 111,131 . (பல்லவி: 103a)

பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!

14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.

24ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். – பல்லவி

72நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.

103உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. – பல்லவி

111உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.

131வாயை ‘ஆ’வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 29ab

அல்லேலூயா, அல்லேலூயா! என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14

அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் மானிடமகன் நெறி தவறியோரை மீட்கவே வந்தார்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 8, 2022 – வ2

புனித தோமினிக் – மறைப்பணியாளர்

நினைவு
மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-10a

சகோதரர் சகோதரிகளே,

கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை.

நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்துகொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.” இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 7-8a. 10 . (பல்லவி: 3a)

பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே,

2aஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். – பல்லவி

2bஅவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

3பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். – பல்லவி

7மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

8aஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். – பல்லவி

10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில்

இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 8, 2022

பொதுக்காலம் 19ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சியை நான் கண்டேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 1: 2-5, 24-28

யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு – கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது.

நான் உற்றுப் பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப் பிழம்பையும், அத்தீப் பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன். அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது.

அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப் படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன. அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது.

அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது. அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும், நெருப்பு சூழ்ந்திருப்பது போன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன். சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது.

இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி. இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 148: 1-2. 11-12. 13-14

பல்லவி: வானமும் வையமும் உமது மகிமையால் நிறைந்துள்ளன.

அல்லது: அல்லேலூயா.

1விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.

2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். – பல்லவி

11உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,

12இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். – பல்லவி

13அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.

14அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். அல்லேலூயா! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிட மகனைக் கொலை செய்வார்கள்; அவர் உயிருடன் எழுப்பப்படுவார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27

அக்காலத்தில்

கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டனர். அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார்.

பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார். “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார்.

இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும் நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 7, 2022

பொதுக்காலம் 19ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 6-9

எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 33: 1,12. 18-19. 20,22 . (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். – பல்லவி

18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். – பல்லவி

20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! – பல்லவி

இரண்டாம் வாசகம்

எதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போல் இருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய் நாட்டைத் தேடிச்செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

எதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-12

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42, 44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-48

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.” அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு ஆண்டவர் கூறியது: “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப் பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப் படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 6, 2022

ஆண்டவரின் தோற்றமாற்றம்

விழா

முதல் வாசகம்

அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1-2. 5-6. 9 . (பல்லவி: 9a, 1a)

பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.

1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!

2மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். – பல்லவி

5ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.

6வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. – பல்லவி

9ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! – பல்லவி

இரண்டாம் வாசகம்

விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.

“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.

எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 17: 5c

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மோசே, எலியா என்னும் இருவர் இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.

அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.

மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார்.

தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 5, 2022 – வ2

தூய கன்னி மரியாவின் பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை)

வி.நினைவு
தூய கன்னி மரியா – பொது

முதல் வாசகம்

புதிய எருசலேம் என்னும் திருநகர் தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப் போல் ஆயத்தமாய் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5a

யோவானாகிய நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப் போல் அது ஆயத்தமாய் இருந்தது.

பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.

அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவை எல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

யூதி 13: 18bc. 19-20a . (பல்லவி: 15: 9d)

பல்லவி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!

அல்லது: அல்லேலூயா.

18bcமகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! – பல்லவி

19கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.

20aஇதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில்

இயேசு பேசிக்கொண்டிருந்த பொழுது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 5, 2022

பொதுக்காலம் 18ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!

இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7

‘வெற்றி! வெற்றி!’ என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்துவிட்டான்.

இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப் போட்டனர்.

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பது எல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறி விழுகின்றனர்.

அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, ‘நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?’ என்று சொல்வார்கள்; உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

இச 32: 35cd-36cd. 39a-d. 41 . (பல்லவி: 39c)

பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!

35cdஅவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.

36cdஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். – பல்லவி

39a-dநானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும்நானே; குணமாக்குபவரும் நானே! – பல்லவி

41மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழிவாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

அக்காலத்தில்

இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks