back to top
Home Blog Page 248

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 23, 2022 – வ2

லீமா நகர் புனித ரோசா – கன்னியர்

வி.நினைவு
கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 17- 11: 2

சகோதரர் சகோதரிகளே,

“பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.” தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.

என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 148: 1-2. 11-13a. 13b-14 . (பல்லவி: 12a,13a காண்க)

பல்லவி: இளைஞரே, கன்னியரே, ஆண்டவரின் பெயரைப் போற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.

2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். – பல்லவி

11உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,

12இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

13aஅவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக. – பல்லவி

13bஅவரது பெயர் மட்டுமே உயர்ந்தது. அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.

14அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 9b, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 23, 2022

பொதுக்காலம் 21ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

எங்கள் வாய்மொழி, திருமுகம் வழியாக அறிவிக்கப்பட்டவற்றில் நிலையாய் இருங்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3a, 14-17

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 10. 11-12a. 12b-13 . (பல்லவி: 13ab)

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். – பல்லவி

11விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

12aவயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். – பல்லவி

12bஅப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

13ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26

அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 22, 2022 – வ2

அரசியான தூய கன்னி மரியா

நினைவு
தூய கன்னி மரியா – பொது

முதல் வாசகம்

ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4, 6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பது போல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.

ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும்.

அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 113: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 2)

பல்லவி: ஆண்டவரது பெயர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!

அல்லது: அல்லேலூயா!

1ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.

2ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! – பல்லவி

3கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!

4மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. – பல்லவி

5நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?

6அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். – பல்லவி

7ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;

8உயர்குடி மக்களிடையே – தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே – அவர்களை அமரச் செய்கின்றார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 28 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.

வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 22, 2022

பொதுக்காலம் 21ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5, 11b-12

நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்கத் திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

சகோதரர் சகோதரிகளே! உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது; நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது. ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்; உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம். இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவை அனத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதி உள்ளவர்கள் ஆவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள்.

நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவர் ஆக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! இவ்வாறு நம் கடவுளும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும், அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 4-5 . (பல்லவி: 3b)

பல்லவி: ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;

2aஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். – பல்லவி

2bஅவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

3பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். – பல்லவி

4ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.

5மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22

அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களை விட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?

எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன் மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 21, 2022

பொதுக்காலம் 21ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

உங்கள் உறவின் முறையாரை அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21

ஆண்டவர் கூறியது:

மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.

அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16:15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! – பல்லவி

2ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. – பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7, 11-13

சகோதரர் சகோதரிகளே,

தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: “பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்துபோகாதே. தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.” திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?

இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.” அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில்

இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:

“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள்.

ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 20, 2022 – வ2

புனித பெர்நார்ட் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர்

நினைவு
மறைவல்லுநர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது

முதல் வாசகம்

அவர்கள் அருந்த, அறிவுக்கூர்மை எனும் உணவை ஞானம் கொடுக்கும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 1-6

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் இவற்றையெல்லாம் செய்வார்கள்; திருச்சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் ஞானத்தை அடைவார்கள். தாய் போன்று ஞானம் அவர்களை எதிர்கொள்ளும்; இளம் மணமகள் போல் அவர்களை வரவேற்கும்.

அறிவுக்கூர்மை எனும் உணவை அவர்கள் அருந்தக் கொடுக்கும்; ஞானமாகிய நீரைப் பருக அளிக்கும். அவர்கள் அதன்மீது சாய்ந்து கொள்வார்கள்; விழ மாட்டார்கள்; அதைச் சார்ந்து வாழ்பவர்கள் இகழ்ச்சி அடைய மாட்டார்கள். அடுத்திருப்பவருக்கு மேலாக அது அவர்களை உயர்த்தும்.

சபை நடுவில் பேச நாவன்மை நல்கும். அவர்கள் அக்களிப்பையும் மகிழ்ச்சியின் முடியையும் கண்டடைவார்கள்; நிலையான பெயரை உரிமையாக்கிக் கொள்வார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 9-10. 11-12. 13-14 . (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

9இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். – பல்லவி

11உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். – பல்லவி

13உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 9b, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சீடர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.

நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.

இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள் மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.

தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 20, 2022

பொதுக்காலம் 20ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7ab

அந்நாள்களில்

மனிதர் ஒருவர் கோவிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ ‘இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி’ கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல் போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று. நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.

ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது. பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அவர் உரைத்தது: “மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 . (பல்லவி: 9b)

பல்லவி: நம் நாட்டில் ஆண்டவரது மாட்சி குடிகொள்ளும்.

8abஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;

9அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். – பல்லவி

10பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். – பல்லவி

12நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.

13நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 23: 9b, 10b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 19, 2022 – வ2

புனித ஜான் யூட்ஸ் – மறைப்பணியாளர்

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது

முதல் வாசகம்

அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-19

சகோதரர் சகோதரிகளே,

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 131: 1. 2. 3

பல்லவி: உம்மோடு நான் அமைதியாய் இருக்க, ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும்.

1ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. – பல்லவி

2மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. – பல்லவி

3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அக்காலத்தில்

இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 19, 2022

பொதுக்காலம் 20ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். என் மக்களே! உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1-14

அந்நாள்களில்

ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.

அவர் என்னிடம், ‘மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?’ என்று கேட்டார். நான், ‘தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே’ என்று மறுமொழி அளித்தேன்.

அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்கு உரை. ‘உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்’ என்று சொல். தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.

எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்கு உரைத்தேன். நான் இறைவாக்கு உரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.

பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்கு உரை: மானிடா! இறைவாக்கு உரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் ‘உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.’

எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்கு உரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள் போல் நின்றனர். அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ ‘எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்’ எனச் சொல்கிறார்கள்.

எனவே, இறைவாக்கு உரைத்து அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ‘ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்’ என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,

3கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக. – பல்லவி

4பாலைநிலத்தில் பாழ்வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;

5பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப் போயினர். – பல்லவி

6தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.

7நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார். – பல்லவி

8ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!

9ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 25: 4c, 5a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில்

இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 18, 2022

பொதுக்காலம் 20ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 23-28

இறைவன் கூறுவது:

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 10-11. 12-13. 16-17 . (பல்லவி: எசே 36: 25)

பல்லவி: தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் அனைவரும் தூய்மையாவீர்கள்.

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். – பல்லவி

12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். – பல்லவி

16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில்

இயேசு மீண்டும் உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.

இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks