back to top
Home Blog Page 243

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 28, 2022

பொதுக்காலம் 26ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

இறைவன் முன் மனிதர் நேர்மையாய் இருப்பதெப்படி?

யோபு நூலிலிருந்து வாசகம் 9: 1-12, 14-16

யோபு தன் நண்பர்களுக்குக் கூறிய மறுமொழி:

உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன் முன் நேர்மையாய் இருப்பதெப்படி? ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்? அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார். அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள். அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. தாமே தனியாய் வானை விரித்தவர். ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.

இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை. நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை. இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைக் கேட்பார் யார்? இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்? நான் நேர்மையாக இருந்தாலும், அவருக்குப் பதிலுரைக்க இயலேன்.

என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்; நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 88: 9bc-10. 11-12. 13-14 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!

9bcஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.

10இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? – பல்லவி

11கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?

12இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா? – பல்லவி

13ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.

14ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்? – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 3: 8-9 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில்

இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 27, 2022 – வ2

புனித வின்சென்ட் தே பவுல் – மறைப்பணியாளர்

நினைவு
மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில் ஈடுபட்டோர்)

முதல் வாசகம்

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்?

ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். – பல்லவி

3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். – பல்லவி

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7aதீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. – பல்லவி

7bஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. – பல்லவி

9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35-38

அக்காலத்தில்

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 27, 2022

பொதுக்காலம் 26ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?

யோபு நூலிலிருந்து வாசகம் 3: 1-4a, 11-17, 20-23

யோபு வாய் திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். யோபு கூறியது: “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! அந்த நாள் இருளாகட்டும்.

கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா? என்னை ஏந்த முழங்கால்கள் முன்வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்ததேன்?

இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன். பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும் அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன். அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன். அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்? சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்; அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்தபாடில்லை. கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்? எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 88: 1-2. 3-4. 5. 6-7 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!

1ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.

2என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்! – பல்லவி

3ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது; என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.

4படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப் படுகின்றேன்; வலுவிழந்த மனிதரைப் போல் ஆனேன். – பல்லவி

5இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்; கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்; அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை; அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள். – பல்லவி

6ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டுவிட்டீர்.

7உமது சினம் என்னை அழுத்துகின்றது; உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 26, 2022 – வ2

புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான் – மறைச்சாட்சியர்

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 1-9

நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந் தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப் பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்ட பின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்த பின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர் விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சி செலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார்.

அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்துகொண்டோர் மீது இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 5)

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.

2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி

2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி

4ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 12

அல்லேலூயா, அல்லேலூயா! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும் போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-33

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 26, 2022

பொதுக்காலம் 26ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!

யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22

ஒரு நாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான். ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார்.

மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம், “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்கு உரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

ஒரு நாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுது கொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்து விட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!” என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 17: 1. 2-3. 6-7 . (பல்லவி: 6cd)

பல்லவி: ஆண்டவரே, உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

1ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். – பல்லவி

2உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.

3என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். – பல்லவி

6இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

7உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50

அக்காலத்தில்

தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.

இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 25, 2022

பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கு ஐயோ கேடு!

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 6: 1, 3-7

எல்லாம் வல்ல இறைவன் கூறுவது:

“சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடிவருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9a. 9bc-10 . (பல்லவி: 1a)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

அல்லது: அல்லேலூயா.

7ஆண்டவர் ஒடுக்கப்பட்டடோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். – பல்லவி

8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

9aஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். – பல்லவி

9bcஅனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார்.

10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 11-16

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில்

இயேசு பரிசேயரிடம் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.

அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார். அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார்.

அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார். ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 24, 2022

பொதுக்காலம் 25ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே.

“வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 . (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. – பல்லவி

5வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;

6அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். – பல்லவி

12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். – பல்லவி

14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45

அக்காலத்தில்

இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.

அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 23, 2022

பொதுக்காலம் 25ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.

வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன்.

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 144: 1a,2a-c. 3-4 . (பல்லவி: 1a)

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1aஎன் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

2a-cஎன் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! – பல்லவி

3ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?

4மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில்

இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 22, 2022

பொதுக்காலம் 25ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

ஞாயிறு தோன்றுகின்றது; மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. . ஞாயி-று தோன்றுகின்றது; . ஞாயி-றும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது.

எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.

அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.

முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, ‘இதோ, இது புதியது’ என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 . (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. – பல்லவி

5வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;

6அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். – பல்லவி

12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். – பல்லவி

14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில்

நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.

ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 21, 2022

புனித மத்தேயு – திருத்தூதர், நற்செய்தியாளர்

விழா

முதல் வாசகம்

இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 . (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.

2ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. – பல்லவி

3அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

4ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks