back to top
Home Blog Page 227

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 1, 2022

தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.

அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’

இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 16-17. 18-19. 20,22 . (பல்லவி: 18a)

பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.

17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். – பல்லவி

18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.

19நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். – பல்லவி

20அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.’

நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.

எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக்கொண்டனர். ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 31, 2022

தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14

அந்நாள்களில்

சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக்கொள்கிறார்கள்” என்றார். மேலும் ஆண்டவர் மோசேயிடம், “இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? ‘மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்’ என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே” என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 106: 19-20. 21-22. 23 . (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!

19அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;

20தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். – பல்லவி

21தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். – பல்லவி

23ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி வாசகம்

உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47

அக்காலத்தில்

இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று.

நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். “என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 30, 2022

தவக்காலம் 4ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15

ஆண்டவர் கூறியது:

தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். சிறைப்பட்டோரிடம் ‘புறப்படுங்கள்’ என்றும், இருளில் இருப்போரிடம் ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள்.

பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர். அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ, அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணைகாட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.

இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்; சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

சீயோனோ, ‘ஆண்டவர் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்’ என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 13cd-14. 17-18 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.

9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி

13cdஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.

14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். – பல்லவி

17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 11: 25a, 26

‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30

அக்காலத்தில்

இயேசு யூதர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்” என்றார். இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.

தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.

இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர். நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2022

தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12

அந்நாள்களில்

வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது.

அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், ‘மானிடா! இதைப் பார்த்தாயா?’ என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2. 4-5. 7-8 . (பல்லவி: 7)

பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

1கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.

2ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. – பல்லவி

4ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

5அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. – பல்லவி

7படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.

8வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 51: 10a, 12a

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

நற்செய்தி வாசகம்

உடனே அம்மனிதர் நலமடைந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16

யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.

அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “என்னை நலமாக்கியவரே ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார். “ ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2022

தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21

ஆண்டவர் கூறுவது:

இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10-11a,12b . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். – பல்லவி

4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. – பல்லவி

10ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.

11aநீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;

12bஎன் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

ஆமோ 5: 14

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.

நற்செய்தி வாசகம்

நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54

அக்காலத்தில்

இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 27, 2022

தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12

அந்நாள்களில்

ஆண்டவர் யோசுவாவிடம், ‘‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.

இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.

நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ரயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 17-21

சகோதரர் சகோதரிகளே,

ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.

எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

லூக் 15: 18

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்’ என்று அவரிடம் சொல்வேன்.

நற்செய்தி வாசகம்

உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ‘‘இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

‘‘ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ‘அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.

தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.

அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 26, 2022

தவக்காலம் 3ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 16-17. 18-19ab . (பல்லவி: ஓசே 6:6)

பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்

1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். – பல்லவி

16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. – பல்லவி

18சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!

19abஅப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 95: 7b, 8b காண்க

‘உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில்

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”

இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2022

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு

பெருவிழா

முதல் வாசகம்

இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b

அந்நாள்களில்

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார்.

அதற்கு ஆகாசு, “நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார்.

அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 40: 6-7a. 7b-8. 9. 10 . (பல்லவி: 7a, 8a காண்க)

பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.

6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.

7aஎனவே, ‘இதோ வருகின்றேன்.’ – பல்லவி

7bஎன்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;

8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். – பல்லவி

9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். – பல்லவி

10உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. – பல்லவி

இரண்டாம் வாசகம்

என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10

சகோதரர் சகோதரிகளே,

காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, ‘இதோ வருகின்றேன்.’ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது” என்கிறார்.

திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல” என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர் “உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார்.

இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14ab

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.

வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2022

தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

ஆண்டவர் கூறியது:

நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7a. 7b-9 . (பல்லவி: 8b,7b காண்க)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். – பல்லவி

6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.

7aஅவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். – பல்லவி

7bஇன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

‘இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 14-23

ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர். அவர்களுள் சிலர், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022 – வ2

புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர்

நினைவுக்காப்பு
மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-14; 2: 1-3

அன்பிற்குரியவரே,

கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு. சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.

கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப் போன்று துன்பங்களில் பங்குகொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 7-8a. 10 . (பல்லவி: 3a)

பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே,

2aஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். – பல்லவி

2bஅவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

3பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். – பல்லவி

7மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

8aஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். – பல்லவி

10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 10: 14-15

நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35-38

அக்காலத்தில்

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
13,500SubscribersSubscribe
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks