back to top
Home Blog Page 226

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 7, 2022 – வ2

லசால் நகர் புனித ஜான் பாப்டிஸ்ட் – மறைப்பணியாளர்

நினைவுக்காப்பு
மறைப்பணியாளர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (கல்விப் பணியாற்றியோர்)

முதல் வாசகம்

தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-14; 2: 1-3

அன்பிற்குரியவரே,

கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு. சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.

கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப் போன்று துன்பங்களில் பங்குகொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவரே, நற்பேறு பெற்றவர்.

அல்லது: (திபா 40: 4a) : ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

அல்லது: (திபா 92: 13) : ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர்.

1நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். – பல்லவி

3அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். – பல்லவி

4பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 23: 11, 12b

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5

அக்காலத்தில்,

சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 7, 2022

தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9

அந்நாள்களில்

ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். இனி உன் பெயர் ஆபிராம் அன்று; ‘ஆபிரகாம்’ என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.

இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார்.

மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 105: 4-5. 6-7. 8-9 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

4ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

5அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். – பல்லவி

6அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!

7அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. – பல்லவி

8அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.

9ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 95: 8b, 7b

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.

நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59

அக்காலத்தில்

இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள்.

இயேசு மறுமொழியாக, “நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்றார்.

யூதர்கள் இயேசுவை நோக்கி, “உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 6, 2022

தவக்காலம் 5ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28

அந்நாள்களில்

நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராய் இருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?” என்றான்.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, “இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்” என்றார்கள்.

இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான். பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.

அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, “மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!” என்றான். “ஆம் அரசரே” என்று அவர்கள் விடையளித்தனர். அதற்கு அவன், “கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!” என்றான்.

அப்பொழுது நெபுகத்னேசர், “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்” என்றான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29. 30-31. 32-33 . (பல்லவி: 34)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.

29எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. – பல்லவி

30உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.

31கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர். – பல்லவி

32உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப் பெறுவீராக.

33உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

லூக் 8: 15

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.

நற்செய்தி வாசகம்

மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்கள்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42

அக்காலத்தில்

இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார். யூதர்கள் அவரைப் பார்த்து, “ ‘உங்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றார்கள். அதற்கு இயேசு, “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்” என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்” என்றார். அவர்கள், “நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்” என்றார்கள்.

இயேசு அவர்களிடம் கூறியது: “கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 5, 2022 – வ2

புனித வின்சென்ட் பெரர் – மறைப்பணியாளர்

நினைவுக்காப்பு
மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்)

முதல் வாசகம்

நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5

அன்பிற்குரியவரே,

கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்க மாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக் கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.

நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு; துன்பத்தை ஏற்றுக் கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 40: 1,3ab. 6-7a,7b-8,9 . (பல்லவி: 7a,8a)

பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற `இதோ வருகின்றேன்.’

1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.

3abபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். – பல்லவி

6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.

7aஎனவே, “இதோ வருகின்றேன்.” – பல்லவி

7bஎன்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;

8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். – பல்லவி

9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

லூக் 21: 36b

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

நற்செய்தி வாசகம்

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 5, 2022

தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில்

ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேலர் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்” என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 102: 1-2. 15-17. 18-20 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்!

1ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக் குரல் உம்மிடம் வருவதாக!

2நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! – பல்லவி

15வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.

16ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.

17திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். – பல்லவி

18இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.

19ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.

20அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

விதை கடவுளின் வார்த்தை; விதைப்பவரோ கிறிஸ்து; இவரைக் கண்டுகொள்கிற அனைவரும் என்றென்றும் நிலைத்திருப்பர்.

நற்செய்தி வாசகம்

நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, `இருக்கிறவர் நானே’ என்பதை அறிந்துகொள்வீர்கள்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30

அக்காலத்தில்

இயேசு பரிசேயர்களை நோக்கி, “நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்” என்றார். யூதர்கள், “ ‘நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது’ என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?” என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ‘இருக்கிறவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்” என்றார்.

அவர்கள், “நீர் யார்?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர், “நான் யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்” என்றார். தந்தையைப் பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, ‘இருக்கிறவர் நானே’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்” என்றார். அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 4, 2022 – வ2

புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர்

நினைவுக்காப்பு
மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது

முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-2, 5-7

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக்கேடான செயல்களை நாங்கள் தவிர்த்துவிட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை; மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம்.

நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப்பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை; அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 5-6. 30-31 . (பல்லவி: 30a)

பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.

3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.

4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். – பல்லவி

5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.

6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். – பல்லவி

30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.

31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 15: 5

நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-45

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 4, 2022

தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62

அந்நாள்களில்

பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சூசன்னாவை மணந்தார். சூசன்னா கில்கியாவின் மகள்; அவர் பேரழகி; ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர். அவர் பெற்றோர் நேர்மையாளராய் இருந்ததால், தங்கள் மகளை மோசே சட்டத்தின் வழியில் பயிற்றுவித்தனர். யோவாக்கிம் பெரும் செல்வர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார்.

அக்காலத்தில் மக்களுள் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப் பெற்றனர். இவர்களைப் பற்றியே ஆண்டவர், ‘‘நடுவர்களாய் இருந்து மக்களை வழிநடத்தவேண்டிய மூப்பர்கள் வாயிலாகப் பாபிலோனினின்று ஒழுக்கக்கேடு வந்துற்றது” என்று சொல்லியிருந்தார். இவர்கள் யோவாக்கிம் வீட்டில் நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர் அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு. நண்பகல் வேளையில் மக்கள் சென்றபின், சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று உலாவு வார். அவர் நாள்தோறும் அங்குச் சென்று உலாவுவதைப் பார்த்து வந்த அந்த முதியோர் இருவரும் அவரைக் காமுறத் தொடங்கினர். இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செலவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறி மாறிச் சென்றார்கள்.

அதற்கு ஏற்றதொரு நாளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஒரு நாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு மட்டும் தோட்டத்தினுள் நுழைந்து, குளிக்க விரும்பினார்; ஏனெனில், அன்று வெயில் கடுமையாக இருந்தது. அந்த முதியோர் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அவர்களோ ஒளிந்திருந்து சூசன்னாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூசன்னா பணிப் பெண்களிடம், ‘‘நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருள்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்” என்று சொன்னார்.

பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து சூசன்னாவிடம் ஓடோடிச் சென்றனர். அவரை நோக்கி, ‘‘இதோ! தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு. இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னோடு இருந்தான் என்றும், அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்” என்றார்கள். சூசன்னா பெருமூச்சு விட்டு, ‘‘நான் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால், எனக்குக் கிடைப்பது சாவு; இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்” என்றார். பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினார். உடனே முதியோர் இருவரும் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும், சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர் ஓரக் கதவு வழியே ஓடிவந்தனர். ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையைச் சொன்னபொழுது, பணியாளர் பெரிதும் நாணங்கொண்டனர்; ஏனெனில் சூசன்னாவைப் பற்றி இது போன்ற எதையும் அவர்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டு வந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர் இருவரும் சேர்ந்து வந்திருந்தனர். அவர்கள் மக்கள் முன்னிலையில், ‘‘கில்கியா மகளும் யோவாக்கிம் மனைவியுமான சூசன்னாவை இங்கு அழைத்து வருமாறு ஆள் அனுப்புங்கள்” என்று கட்டளையிட்டார்கள். உடனே அவரை அழைத்து வர ஆள் அனுப்பினர். சூசன்னா வந்தார். அவரோடு அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர்.

அவருடைய உற்றார் உறவினரும், அவரைப் பார்த்தவர் அனைவருமே அழுதுகொண்டிருந்தார்கள். முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினார்; ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது. அப்பொழுது முதியோர் பின்வருமாறு கூறினர்: ‘‘நாங்கள் தோட்டத்தில் தனியாக உலாவிக் கொண்டிருந்த பொழுது, இவள் இரு பணிப்பெண்களோடு உள்ளே வந்தாள்; தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப் பெண்களை வெளியே அனுப்பி விட்டாள். பின்னர் அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம் வந்து இவளோடு படுத்தான். நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்; இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம். அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களை விட வலிமை மிக்கவன். எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான். நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம். இவளோ எங்களுக்கு மறுமொழி கூற மறுத்துவிட்டாள். இவற்றுக்கு நாங்களே சாட்சி”. அவர்கள் மக்களுள் மூப்பர்களாகவும் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள் கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது.

அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, ‘‘என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!” என்று சொன்னார். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.

கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார். தானியேல் உரத்த குரலில், ‘‘இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கத்தினார். மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, ‘‘நீர் என்ன சொல்கிறீர்?” என்று வினவினர். அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: ‘‘இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற மூப்பர்கள் தானியேலிடம், ‘‘நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்” என்று வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது தானியேல், ‘‘இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்” என்றார். எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, ‘‘தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன. ‘‘மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே” என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்” என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘விளா மரத்தடியில்” என்றார். அதற்குத் தானியேல், ‘‘நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்” என்றார்.

பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவரை நோக்கி, ‘‘நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது. நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக் கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்” என்றார். அவரோ, ‘‘கருவாலி மரத்தடியில்” என்றார். தானியேல் அவரிடம், ‘‘நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்” என்றார்.

உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

குற்றம் எதுவும் நான் செய்தறியேன்; ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 41c-62

அந்நாள்களில்

இஸ்ரயேல் மக்கள் கூட்டம் சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது. அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, “என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!” என்று சொன்னார். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.

கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார். தானியேல் உரத்த குரலில், “இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கத்தினார். மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, “நீர் என்ன சொல்கிறீர்?” என்று வினவினர். அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: “இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற மூப்பர்கள் தானியேலிடம், “நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்” என்று வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது தானியேல், “இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்” என்றார். எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, “தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன. “மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே” என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்” என்று கேட்டார். அதற்கு அவர், “விளா மரத்தடியில்” என்றார். அதற்குத் தானியேல், “நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்” என்றார்.

பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவரை நோக்கி, “நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது. நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக்கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்” என்றார். அவரோ, “கருவாலி மரத்தடியில்” என்றார். தானியேல் அவரிடம், “நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்” என்றார்.

உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 4ab)

பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன்.

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்.

3aஅவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். – பல்லவி

3bதம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி

5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எசே 33: 11

‘தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பமன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

உலகின் ஒளி நானே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 12-20

அக்காலத்தில்

இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார். பரிசேயர் அவரிடம், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர்.

அதற்கு இயேசு, “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்பு செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப்பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்” என்றார். அப்போது அவர்கள், “உம் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்” என்றார்.

கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 3, 2022

தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21

கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 3)

பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.

2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி

2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி

4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

சகோதரர் சகோதரிகளே,

உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின்மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11

அக்காலத்தில்

இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, ‘‘போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.

இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

இயேசு நிமிர்ந்து பார்த்து, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், ‘‘இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022 – வ2

புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி

நினைவுக்காப்பு
புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

சகோதரர் சகோதரிகளே,

உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.

அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 11 . (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

2aநான் ஆண்டவரிடம் நீரே என் தலைவர் என்று சொன்னேன்.

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. – பல்லவி

7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 5: 3

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-34

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப் பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக்கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022

தவக்காலம் 4ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், ‘மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்’ என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.

படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 7: 1-2. 8bc-9. 10-11 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

1என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.

2இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். – பல்லவி

8bஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.

9பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். – பல்லவி

10கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.

11கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி வாசகம்

கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

அக்காலத்தில்

யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர். வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
13,500SubscribersSubscribe
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks