back to top
Home Blog Page 224

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 26, 2022

பாஸ்கா 2ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37

அந்நாள்களில்

நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.

தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள், ‘ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்’ என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 93: 1ab. 1c-2. 5 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

அல்லது: அல்லேலூயா.

1abஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். – பல்லவி

1cபூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.

2உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். – பல்லவி

5உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 15

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.

நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 25, 2022

புனித மாற்கு – நற்செய்தியாளர்

விழா

முதல் வாசகம்

என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14

அன்பிற்குரியவர்களே,

ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.” ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்.

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.

நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள்.

உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.

இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 5-6. 15-16 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

1ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

2உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. – பல்லவி

5ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.

6வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? – பல்லவி

15விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.

16அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 கொரி 1: 23a, 24b

அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில்

இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 24, 2022

பாஸ்கா 2ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16

அந்நாள்களில்

மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடிவந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.

ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல் நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 2-4. 22-24. 25-27a . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

2‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

3‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

4‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. – பல்லவி

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். – பல்லவி

25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!

26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27aஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றென்றும் வாழ்கிறேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 9-11a, 12-13, 17-19

உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம் போல முழங்கக் கேட்டேன். “நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.

என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.

நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் எழுதிவை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 23, 2022

பாஸ்கா எண்கிழமை – சனி

பெருவிழா

முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1,14-15. 16,18. 19-21 . (பல்லவி: 21a)

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

14ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.

15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. – பல்லவி

16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. – பல்லவி

19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 22, 2022

பாஸ்கா எண்கிழமை – வெள்ளி

பெருவிழா

முதல் வாசகம்

இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12

அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ‘‘நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள்.

அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ‘‘மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2,4. 22-24. 25-27a . (பல்லவி: 22)

பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

4‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. – பல்லவி

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். – பல்லவி

25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!

26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27aஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 21, 2022

பாஸ்கா எண்கிழமை – வியாழன்

பெருவிழா

முதல் வாசகம்

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26

கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக்கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்றுச் சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒருசேர ஓடிவந்தனர். பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.

அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள். அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம்வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக் குறித்துக் கூறியிருந்தார்.

மோசேயும், ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்’ என்று கூறியுள்ளார்.

சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், ‘உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்’ என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்களே. ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீய செயல்களை விட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 8: 1a,4. 5-6. 7-8 . (பல்லவி: 1ab)

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1aஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

4மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? – பல்லவி

5ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.

6உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படிச் செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். – பல்லவி

7ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,

8வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48

அக்காலத்தில்

சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ‘‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ‘‘நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ‘‘உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.

பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ‘‘மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ‘‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 20, 2022

பாஸ்கா எண்கிழமை – புதன்

பெருவிழா

முதல் வாசகம்

என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10

ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகுவாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.

பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப்பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.

அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகுவாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்மறந்து நின்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 . (பல்லவி: 3b)

பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

2அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! – பல்லவி

3அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

4ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! – பல்லவி

6அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!

7அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. – பல்லவி

8அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.

9ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35

வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!”என்றார். அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 19, 2022

பாஸ்கா எண்கிழமை – செவ்வாய்

பெருவிழா

முதல் வாசகம்

மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது:

“நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார். மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 33: 4-5. 18-19. 20,22 . (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. – பல்லவி

18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். – பல்லவி

20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் ஆண்டவரைக் கண்டேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில்

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 18, 2022

பாஸ்கா எண்கிழமை – திங்கள்

பெருவிழா

முதல் வாசகம்

கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்:

‘‘யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

தாவீது அவரைக் குறித்துக் கூறியது: ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.“

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2. 5,7-8. 9-10. 11 . (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

2நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். – பல்லவி

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;

7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி

9என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

10ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். – பல்லவி

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 8-15

அக்காலத்தில்

கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, “ ‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்’ எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்” என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 17, 2022

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு

பெருவிழா

முதல் வாசகம்

இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34a, 37-43

அந்நாள்களில்

பேதுரு பேசத் தொடங்கி, ‘‘திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.

யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16-17. 22-23 . (பல்லவி: 24)

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி

16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். – பல்லவி

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! – பல்லவி

இரண்டாம் வாசகம்

மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-4

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். ஆகையால், பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6b-8

சகோதரர் சகோதரிகளே,

சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

தொடர்பாடல்

இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.

பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.

மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.

சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.

வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.

உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.

சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.

கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.

மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 கொரி 5: 7b-8b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, ‘‘ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.

அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2022 மே ►
ஞா 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
13,500SubscribersSubscribe
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks